ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியது ஏன்? புதிய தகவல்

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி தலைமையில் கடந்த 21-ந் தேதி அமீரகம் சென்றடைந்தது. தங்களது 6 நாள் தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியை தொடங்க இருந்த நிலையில் சென்னை அணியை சேர்ந்த 2 வீரர்கள் (தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட்) உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள், உதவியாளர்கள், வலைப்பயிற்சி பவுலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சென்னை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் துணை கேப்டனும், எல்லா சீசனிலும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவரும், ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராட்கோலிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருப்பவருமான 33 வயது சுரேஷ் ரெய்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியில் இருந்து திடீரென விலகி நாடு திரும்பினார். தனிப்பட்ட காரணத்தினால் சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து ஒதுங்கியதாகவும், இந்த சீசனில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.